ஆறுமுகநாவலரும் சிதம்பரமும்

-ச. அம்பிகைபாகன்-
 

"சிதம்பரம் போகாமல் இருப்பேனோ

சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ"
 

என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடி இருப்பது, நந்தனாருக்குச் சிதம்பர தரிசனத்தில் இருந்த ஆர்வத்தை மாத்திரமில்லாமல், சைவர்களாயுள்ளோர் எல்லோரினதும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது. சைவர்களாய் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிதம்பரத்தைத் தரிசிக்காதுவிட்டாற் பிறவிப் பயனை அடையாதவர்களாகத் தம்மைக் கருதுவர். இப்படி இவர்கள் கருதுவதற்குக் காரணம் சிதம்பரத்தின் ஒப்பற்ற மகிமையே. ஆறுமுக நாவலரவர்கள் சிதம்பரத்தின் மகிமையைப் பெரியபுராணம் தில்லைவாழந்தணர் புராணத்துக்கு எழுதிய சூசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

சிதம்பரத்தின் மகிமை

"சாந்தோக்கிய உபநிடததிலே பிரமபுரத்திலுள்ள நகரமாகிய புண்டரிக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாச மத்தியில் விளங்கும் அதிசூக்கும சித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரிக வீடென்பது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்குமசித்தென்றது பரப்பிரம்மமாகிய சிவத்தையும் என்றறிக. புறத்தும் இப்படியே இப்பிரமாண்டம் பிரமபுரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்குந் தில்லைவனம் புண்டரிக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசக்தியாகிய திருச்சிற்றம்பலம் எனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ் செய்யும் பரப்பிரம்மசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம் போற் சடமாகாது சித்தேயாம்; ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளக்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரம் எனப் பெயர்பெறும்."

தில்லைவாழ் அந்தணர் பெருமை

மேலே குறிப்பிடப்பட்ட அதே சூசனத்தில் கூத்தப்பெருமானைப் பூசிக்கும் அந்தணர் பெருமையையும் விளக்கியுள்ளார். அதன் சாரம் பின்வருமாறு: ஒருமுறை பிரமா, தாம் புரியும் யாகத்துக்கு உதவிசெய்யும் பொருட்டு வியாக்கிரபாதமுனிவரின் அனுமதியோடு தில்லை மூவாயிரவரைக் கங்கை நதிதீரத்துக்கு அழைத்துச் சென்றார். உரியகாலத்தில் அவர்கள் திரும்பி வராதபடியால், வியாக்கிரபாத முனிவர் இரணியவன்ம சக்கரவர்த்தியை அழைத்துவரும்படி அனுப்பினார். அப்படி அழைத்து வந்து தில்லை மூவாயிரவரை எண்ணியபொழுது ஒருவர் குறைவதைக்கண்டு சக்கரவர்த்தி திகைத்தார். அப்பொழுது சிவபெருமான் தேவர் முதலிய யாவரும் கேட்ப பின்வருமாறு கூறினார். "இவ்விருடிகள் எல்லோரும் எமக்கு ஒப்பாவார்கள். நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால் நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள்".

மேற்கூறியவாறு சிதம்பரத்தின் மகிமையை உணர்ந்தே நாவலரவர்கள் அதியே கேந்திரமாக வைத்து சைவத்தை வளர்க்க ஒரு மாபெருந் திட்டம் வகுத்தார்.

நாவலர் கல்விப்பணி

சிதம்பரத்திற்குச் செல்லுமுன் நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை, கந்தர் மடம், கோப்பாய், பருத்தித்துறை முதலிய இடங்களில் சைவப் பிரகாச வித்தியாசாலைகளைத் தாபித்தார். ஆனால் சிதம்பரத்தில் நாவலர் அவர்கள் ஒரு சாதாரண வித்தியாசாலையைத் தாபிக்கத் திட்டம் போடவில்லை. அவர்கள் போட்ட திட்டம் சைவப்பிரசாரர்களைப் பயிற்றும் ஒரு தாபனத்திற்கே. இத்தாபனம் கத்தோலிக்கரின் செமினறிகளையும் புரட்டஸ்தந்தரின் மதச்சாத்திரக் கல்லூரிகளையும் போன்றதாகும்.

நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் தாபிக்க இருந்த நிறுவனத்துக்கு ஒரு பதினான்கு அம்சத் திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு முன்னுரையாக பின்வருமாறு கூறியுள்ளார். "கிறிஸ்து சமயிகள் பெரும்பாலும் தங்கள் சமயநூலைத் தாங்கள் கற்றும் வெகு திரவியங்களிச் செலவிட்டுப் பாடசாலைகளைத் தாபித்துப் பிறருக்குக் கற்பித்தும், தங்கள் ஆலயங்களிலும் பிற இடங்களிலும் யாவருக்கும் போதித்தும் வருகிறபடியினாலே அவர்கள் சமயம் எத்தேசங்களிலும் வளர்ந்தோங்கி வருகிறது". நாவலரவர்கள் மேற்காட்டப் பெற்றவற்றைக் கூறியதற்குக் காரணம் சைவர்களும் கிறிஸ்தவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றித் தமது சமயத்தை வளர்க்க வேண்டுமென்பதே.

'தமிழகத்தை ஈழநாட்டுக்கு கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர்'

- சோமசுந்தர பாரதியார்

நன்றி: இந்து ஒளி - Quarterly of All Ceylon Hindu Congress

 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top